Published Date: February 3, 2025
CATEGORY: CONSTITUENCY

தென் மாவட்டங்களில் முதன் முறையாக மதுரை தாஜ் மருத்துவமனையின் 'தாஜ் ஆர்த்தோபெடிக் ரிசர்ச் சென்டரில் (டார்க்)மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்காக 'வெலிஸ்' என்னும் பிரத்தியேக ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான விழாவில் வேளாண் மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ரத்தினவேலு தலைமை வகித்தார். டாக்டர் பிரீத்திகா வரவேற்றார். அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ரோபோவை அறிமுகம் செய்தார்.
அவர் பேசியதாவது: 30 ஆண்டுகளில் ரோபோடிக்ஸ்துறை அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. உற்பத்தி துறை 90 சதவீதம் ஆட்டோமேஷனால் இயங்குகிறது. மருத்துவத்துறையில் மனித டாக்டர்களை விட சிறந்த பலன்களை ஏ.ஐ.தொழில்நுட்பம் வழங்குகிறது. மருத்துவச் சுற்றுலாவின் முக்கிய தளமாக மதுரை திகழ்வதால், மதுரை விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்ந்த முயற்சி மேற்கொள்வேன் என்றார்.
டார்க் ஆர்த்தோ மருத்துவ இயக்குனர் டாக்டர் குணால் தீப் பேசியதாவது: 55 வயதுக்கு மேற்பட்டோர் மூட்டு தேய்மானத்தால் அவதிப்படுகின்றன. இந்த 4-ம் தலைமுறை ரோபோ மூலம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை 3டி தொழில்நுட்ப மூலம் துல்லியமாக மேற்கொள்ள முடியும். குறைந்த நேரசிகிச்சை, ரத்தப்போக்கு, தழும்புகள் தவிர்க்கப்படுவது இதன் சிறப்பு.இந்த சிகிச்சைக்கு வழக்கமான கட்டணத்தை விட கூடுதலாக ரூ.50ஆயிரம் ஆகும். முதல் நோயாளிகளுக்கு சாதாரண கட்டணம் வசூலிக்கப்படும். 72 வயதுக்கு மேற்பட்டோர் முதல்வர் காப்பீட்டு திட்டத்திலும், மற்றவர்கள் தனியார் காப்பீட்டு திட்ட மூலமும் பயன்பெறலாம். முடக்கு வாதன் நோய்களுக்கு இந்த சிகிச்சை பயனளிக்கும்.
தமிழ்நாடு ஸ்டார்ட் அப் தலைமை செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன், அரசு மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ் குமார், அரவிந்த் கண் மருத்துவமனை கல்வி இயக்குனர் வெங்கடேஷ் பிரஜ்னா , வழக்கறிஞர் ஹென்றி திபாங்கே, நடிகர் சவுந்தரராஜா பேசினர். டாக்டர்கள் தாஜ், தீப், சுதா, பூமிநாதன் எம்.எல்.ஏ., கே.ஜி.எஸ்., ஸ்கேன்ஸ் ஸ்ரீனிவாசன், மகாத்மா பள்ளி மூத்த முதல்வர் பிரேமலதா, பாரா ஒலிம்பிக் தேசியப் பயிற்சியாளர் பத்ரிநாராயணன், வழக்கறிஞர் லஜபதிராய் பங்கேற்றனர்.
Media: Dinamalar